Powered By Blogger

சனி, 9 ஏப்ரல், 2016

தாகம் தணிய...!

கோடைக்காலம் வந்துவிட்டாலே எனக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்பட்டு, மிகவும் அவதிப்படுகிறேன். வாய் கசப்பு, தலையில் அளவுக்கதிகமான சூடு, குளிர்ச்சியான பொருட்களில் விருப்பம், மயக்கம், கண்கள் மஞ்சள் நிறமாகுதல், சிறுநீரிலும் மலத்திலும் அதிகமான மஞ்சள் நிறமும் எரிச்சலும் ஏற்படுதல் போன்ற உபாதைகள் உண்டாகின்றன. வாரம் இருமுறை சிறிய அளவில் மது அருந்தும் பழக்கமும் எனக்கு இருக்கிறது. இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
- ஆ.வெங்கடசுப்ரமணியன், திண்டுக்கல்.
பித்தம் எனும் தோஷம் அக்னி எனும் மஹாபூதத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால், நம் உடலில் உள்ள நீர் திரவங்களை எல்லாம் எளிதில் சூடாக்கிவிடுகிறது. இதனால் இந்த நீர் திரவங்களில் ஏற்படும் சூடானது குறைவதற்காக தண்ணீர் தாகத்தை அவை ஏற்படுத்துகின்றன. தண்ணீர் தாகமானது பித்தம் மற்றும் வாயுவினுடைய சேர்க்கை இல்லாமல் ஏற்படுவதில்லை என்று சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. ஏனெனில் இவற்றினுடைய சீற்றமானது, உடலிலுள்ள நீர்ப்பசையை சுண்டச் செய்துவிடுகின்றன. அதுவே தண்ணீர் தாகத்திற்கும் காரணமாகிறது. எளிதில் செரிக்காத உணவு, பால், மாமிசவகை உணவுகள் ஆகியவை சாப்பிட்டாலும் தண்ணீர் தாகம் சிலருக்கு ஏற்படுகிறது. இதற்குக் உட்புற உணவுக்குழாய்களில் வாயு மற்றும் பித்ததோஷங்களால் ஏற்படும் அடைப்பு தான் காரணமாகிறது.
மதுபானத்தில் உள்ள ஊடுருவும் தன்மை, சூடு மற்றும் வறட்சி எனும் குணங்களால் பித்தவாயுக்கள் சீற்றமடைந்து நீர் திரவங்கள் வறண்டு ஏற்படும் வறட்சியானது தண்ணீர் தாகத்தைத் தோற்றுவிக்கிறது. அதனால் கோடைக்காலங்களில் நீங்கள் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாது என்று தோன்றும் பட்சத்தில் சிறிய அளவில் மதுபானத்தில் நிறைய தண்ணீர் கலந்து அருந்தலாம். சூடான மணற்பரப்பின் மீது தண்ணீரைத் தெளித்தோமேயானால் அதிலுள்ள சூடு அடங்குவதைப்போல குளிர்ந்த மண்பானைத் தண்ணீரை அருந்துவதால் உடலிலுள்ள நீர் திரவங்களில் ஏற்பட்டுள்ள சூடானது தணிந்துவிடுகிறது. ஆனால் நன்கு குளிர்ந்த நீரில் குளித்தால் உடலிலிருந்து வெளிப்புறம் சென்று கொண்டிருக்கும் வெப்பமானது தடைபட்டு உட்புறம் நோக்கித் திரும்பி குடலைச் சென்றடைந்து தண்ணீர் தாகத்தை ஏற்படுத்துகின்றது. சூட்டினால் சோர்வடைந்த நபரானவர் உடனடியாக குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
நம் முன்னோர் தண்ணீர் தாகத்தை தவிர்ப்பதற்காக மழைத் தண்ணீரை பூமியில் விழும்முன்பே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இந்த மழைநீரை ஒரு சிறுஅளவில் எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிடுவார்கள். மழைநீரைச் சேகரிக்க முடியாத இக்காலங்களில் நாம் அருந்தும் தண்ணீரானது இறுதியில் சிறிது துவர்ப்புச் சுவையுடன் கூடியதாகவும், மெல்லியதாகவும், லேசானதாகவும், குளிர்ந்ததாகவும், துர்நாற்றமில்லாததாகவும், பிசுபிசுப்பற்றதாகவும் இருக்குமேயானால், அதுவும் மழைநீருக்குச் சமம் என்று குறிப்பிடலாம். தண்ணீர் தாகத்தைப் போக்குவதற்கான சில எளிய குறிப்புகள்:
கரும்புவேர், தர்ப்பைப்புல், நாணல் வேர், நெல்லினுடைய வேர் ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 250 மி.லிட்டராக குறுக்கி வடிகட்டி, குளிர்ந்த பிறகு அதில் 10 கிராம் சீனா கல்கண்டு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக, பருகலாம்.
10 கிராம் நெல்பொரியைப் பொடித்து 300 மி.லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை ஸ்பூன் சர்க்கரையும், தேனும் கலந்து பருகலாம்.
அரிசி போட்டு காய்ச்சிய கஞ்சித் தண்ணீரை ஆற வைத்து சிறிது தேன் கலந்து பருகலாம்.
பால் சாதத்துடன் தேனும் சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம்.
பச்சைப்பயறு, கறுப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை ஆகியவை போட்டுக் காய்ச்சிய சூப்புடன் நெய் கலந்து பருகலாம்.
காய்ச்சி ஆற வைத்த பாலுடன் தேனும், சர்க்கரையும் கலந்து பருகலாம்.
கரும்புச்சாறு, சிறிது சர்க்கரை கலந்து கரைத்து நான்கைந்து சொட்டுகள் மூக்கினுள் விட தண்ணீர் தாகமானது குணமாகிவிடும்.
ஆயுர்வேத மூலிகை மருந்துகளாகிய சதாவரி குலம், த்ராக்ஷôதி கஷாயம், வாசா குடூச்யாதி கஷாயம், விதார்யாதி க்ருதம், சந்தனாதி தைலம், ப்ரவாளபற்பம் போன்ற மருந்துகள் இதுபோன்ற தண்ணீர் தாகம் உள்ள நிலைகளில் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தத் தக்கவை.

புதுமைகளைப் புகுத்துபவர்

மழைக் காலத்தில்தான் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். கொசு அதில் பலமடங்கு பெருகி, மனிதர்களை விரட்டி விரட்டிக் கடிக்கும். வெயில் காலத்தில் கொசு காணாமற் போகும். இது அந்தக் காலம்.
இப்போது எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும், அந்த வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு உயிர் பிழைக்கக் கற்றுக் கொண்டுவிட்டது, கொசு இனம். அதனால் வீடுகள் தோறும் கொசுவர்த்தி... புகை வருவது, வராதது, நெடி அடிப்பது, அடிக்காதது என கொசு விரட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.
இந்த கொசு விரட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை விற்பதற்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்து தொலைக்காட்சிகளில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள்.
என்றாலும் இவற்றை வேறுவழியில்லாமல் பயன்படுத்துகிறோம் நாம். இந்த கொசுவிரட்டிகளைச் சுவாசிக்கிறோமே, நமக்கு அதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற பயம் வரத்தான் செய்கிறது.
""நான் உருவாக்கியுள்ள கொசு விரட்டி எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என்கிறார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெ.சாரதி.
கொசு விரட்டி மட்டுமல்ல, கைகளினால் சுற்றும் வாஷிங் மெஷின், நவீன விறகு அடுப்பு என அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பலவற்றை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த கண்டுபிடிக்கும் எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன? என்று கேட்டோம்:

""என் அப்பா வெங்கடசாமி ஒரு மருத்துவர். சுதந்திரப் போராட்ட வீரர். சென்னைத் துறைமுகத்தில் வேலை செய்து வந்த அவரை அவருடைய தீவிரமான சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்காக, வேலை நீக்கம் செய்தார்கள். அவர் துறைமுகத்தில் வெல்டர் வேலை செய்து வந்தார். அதற்குப் பின்பு 1947 இல் அவர் இந்தப் பகுதியில் அச்சு வேலை தொடர்பான இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார். இருந்தாலும் அவ்வப்போது மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
அவர் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிலை நடத்தியதாலும், நானும் ஐடிஐயில் மெக்கானிக்கல் ட்ராப்ட்ஸ்மேன் படித்திருந்ததாலும், புதிய இயந்திரங்களை உருவாக்கும் அறிவும் எனக்கு ஏற்பட்டது.
1973 இல் இருந்து, கைகளினால் கண்ணாடியை அறுக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நானும் என்னுடைய சகோதரரும் நடத்தி வந்தோம். அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, ஜப்பான், கொரிய நாட்டு மோட்டார் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் இந்தியாவில் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கின. நாங்கள் செய்த கண்ணாடி அறுக்கும் இயந்திரத்தின் விற்பனை பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட அரசின் வரிக்கொள்கை இடம் தரவில்லை.
இதனால், தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. பலர் வேலை செய்துவந்த தொழிற்சாலையில் பூனைகள் சுற்றித் திரிந்தன. அவற்றின் உடலின் மேல் உள்ள பூச்சிகள், மனிதர்களைக் கடித்தன. அப்போதுதான் நான் கற்பூரவல்லி இலையை அரைத்து உடம்பில் பூசிக் கொண்டேன். என்னை ஒரு பூச்சியும் கடிக்கவில்லை. பூச்சிகள் விலகி ஓடின. அதிலிருந்துதான் கற்பூரவல்லி கொசுவை விரட்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
நான் உருவாக்கியுள்ள இந்த கொசுவிரட்டியை யார் வேண்டுமானாலும் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு அருகே கற்பூரவல்லி வளர்ந்து கிடக்கும். சோற்றுக் கற்றாழையை நம்மால் வளர்க்க முடியும். கற்பூரவல்லி ஒரு பங்கு, சோற்றுக் கற்றாழை ஒரு பங்கு, தண்ணீர் ஒரு பங்கு இந்த மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைத்ததை பத்துநாட்கள் ஊற வைக்க வேண்டும். தினமும் அதை நிழலில் காய வைக்க வேண்டும்.
பத்துநாள் கழித்து ஒரே ஒரு மூடி - சிறிதளவு - அந்த திரவத்தை ஒரு டம்ளரில் ஊற்ற வேண்டும். அந்த டம்ளருக்குள் இன்னொரு டம்ளரை வைக்க வேண்டும். பிறகு ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப்பை அந்த இன்னொரு டம்ளருக்குள் எரிய விட வேண்டும். ஜீரோ வாட்ஸ் பல்ப் ஏற்படுத்தும் வெப்பத்தில் அந்த மூலிகைக் கலவை மெல்லிய ஆவியாகி காற்றில் கலக்கும். உடனே அந்தப் பகுதியில் உள்ள கொசுக்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பறந்தோடி விடும். எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு மூடி திரவத்தை ஊற்ற வேண்டும். இந்தக் கலவை உள்ள பகுதியில் கொசுக்கள் செத்து விழுவதும் உண்டு.
இதே கற்பூரவல்லி, சோற்றுக் கற்றாழைக் கலவையைப் பயன்படுத்தி கொசுவர்த்தியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தயாரித்திருக்கிறேன்.
கொசுவிரட்டி மட்டுமல்ல, நான் உருவாக்கியுள்ள பல இயந்திரங்கள் மக்களுக்குப் பயன்படும்படி உள்ளன. நான் உருவாக்கியுள்ள இயந்திரங்களுள் ஒன்றுதான் கைகளினால் சுற்றும் வாஷிங் மெஷின். மூன்று நான்கு துணிகளைப் போட்டு, வாஷிங் பவுடரை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி 30 சுற்றுகள் கைகளினால் சுற்றினால்போதும், அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள நவீன வாஷிங் மெஷின்களை விட இந்த வாஷிங் மெஷின் மிக நன்றாகத் துணிகளில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடும். இத்தனைக்கும் நான் தயாரித்துள்ள வாஷிங் மெஷினுக்குள் கிடப்பது நான்கைந்து ரப்பர் பந்துகள். அந்தப் பந்துகள்தாம் துணியில் மோதி அழுக்குகளை நீக்குகின்றன.
சமையல் கேஸ் நாளுக்குநாள் விலை உயர்ந்து கொண்டே போகிறது. புக் செய்தாலும் சில சமயங்களில் 20 நாட்களுக்கு மேல்தான் சமையல் கேஸ் கிடைக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நான் தயாரித்துள்ள நவீன அடுப்பு நிச்சயம் உதவும்.
நான் உருவாக்கியுள்ள அடுப்பை அரை மணி நேரம் எரிக்க வெறும் அரை கிலோ விறகுபோதும். சாதாரண அடுப்புகளைப் போல விறகு வைக்கும் இடம் இந்த அடுப்பில் திறந்திருக்காது. விறகுகளைப் போட்டதும் அடுப்பில் உள்ள சிறு கதவை மூடி விட வேண்டும். அடுப்பில் உள்ள சிறு துவாரங்களின் வழியாக காற்று உள்ளே சென்று விறகை எரிய வைக்கும். விறகு வெளித் தெரியும்படி இருந்தால், சுற்றிலும் உள்ள அதிக அளவிலான காற்றின் காரணமாக, எரியும் திறனை விறகு இழந்துவிடுகிறது. விறகு உருவாக்கும் வெப்பத்தின் பெரும் பகுதி வீணாகக் காற்றில் கலந்தும்விடுகிறது. நான் உருவாக்கியுள்ள அடுப்பில் வெப்பம் வீணாவது தடுக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக எரியும் திறன் கிடைக்கிறது.
""கொசு விரட்டிக்கு அதிகத் தேவை உள்ள இக்காலத்தில் நீங்கள் வெளிப்படையாக அதைத் தயாரிக்கும்முறைகளைச் சொல்கிறீர்களே... நீங்களே ஓர் இயற்கை கொசுவிரட்டி தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி லாபகரமாக நடத்தலாமே?'' என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது இதுதான்:
சாதாரண மக்கள் ஒவ்வொரு நாளும் கொசு விரட்டிகளுக்காகச் செலவு செய்வது அதிகமாக உள்ளது. மேலும் இந்தக் கொசுவிரட்டிகளால் மனித உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, எல்லாரும் அதிகச் செலவில்லாமல் தங்களுடைய வீடுகளில் செய்து கொள்ளும் இந்தக் கொசுவிரட்டியைத் தயாரிக்கும் முறை பற்றி வெளிப்படையாகச் சொன்னால், ஏழை மக்கள் பயன் அடைவார்கள் அல்லவா?'' என்று கேட்டு நம்மை நெகிழ வைக்கிறார் சாரதி.

வியாழன், 31 மார்ச், 2016

ஏப்ரல் 1

1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு  ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.”
Tower of London: Admit Bearer and Friend to view annual ceremony of Washing the White Lions on Sunday, April 1, 1860. Admittance only at White Gate.
Tower-of-London
அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர்.
முட்டாள்கள் தினம் வரலாற்றில் இதுபோன்று பல நிகழ்வுகள் மக்களை வெறுப்பேற்றி வேடிக்கை செய்துள்ளன.
என் நினைவில் இருப்பதோ பள்ளி காலத்தில் என் நண்பன் என்னை ஏமாற்றி சம்பவங்கள் தான்.ஏப்ரம் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்பதால் ‘டேய் உன் சட்டையில் யாரோ இங்க் அடிச்சுடான்டா,முதுகுல பாரு’.நானும் தேடிதேடி பார்த்து ஒருகட்டத்தில் சட்டையை கழட்டி தேடிவிட்டேன்,காது கிழிய ஏப்ரல் ஃப்ல் சத்தம் மட்டுமே கேட்டது.அப்புறம் என்ன நானும் அவனோடு சேர்ந்துக் கொண்டு அடுத்து வந்தவனை ஏமாற்றினோம்.
ஆனால் இவையெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? அதற்கு பல விளங்கங்கள் உள்ளது.
பொதுவான கருத்து பிரென்சு நாட்டில் தொடங்கியது என்பது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.1562ம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை மாறி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
April Day.png
இருப்பின் எல்லா ஐரோப்பிய நாடுகளும் இந்த காலண்டரை ஏற்றுக்கொள்ள நாட்கள் ஆனது.பிரென்சில் இந்த முறை வந்ததும் ஜனவரி புத்தாண்டு கொண்டாடிய மக்கள் ஏப்ரல் மாதம் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என கிண்டலடித்தனர்.அதுவே காலப்போக்கில் முட்டாள்கள் தினமாய் மாறியதாம்.
இது சரியானதாய் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனின் பிரென்சு மற்றும் இங்கிலாத்தில் இந்த புத்தாண்டு முறை வரும் முன்பே முட்டாள்கள் தினம் இருந்துள்ளது.மேலும் இவை நேரடியாக வந்த வரலாறு அல்ல.மற்றவர்கள் சொல்லப்பட்டதுதான்.
கான்ஸ்டன்டைன் காலத்தில் சில முட்டாள்கள் மன்னர் நாடாள திறனற்றவர் என கூற அவர் கோபமடைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனை ஒருநாள் அரசனாக மாற்றினார்.அந்த நாளை அன்றைய அரசர் அபத்த நாளாக பிரகடணம் செய்தார்.பின்னாளில் அது வழக்கமாயிற்று என்பது கோட்பாடு.இந்த அறிக்கை தகவல் 1983 ல் வெளியான போது பல செய்தியாளர்களால் முன்மொழியப்பட்டது. 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
ரோமர்களின் நம்பிக்கையின்படி புளூட்டோ கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. source
எனினும் எந்த வழிமுறையும் இது எப்படி உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் அளவிற்கு பிரபலமானது என்பதை விளக்கவில்லை.ஆனால் அதற்கான பதிலை இயற்கை கொண்டுள்ளது.
பொதுவாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் வசந்த/கோடை காலத்தை வரவேற்கும் விதமாக பல புராதாண நாடுகளில் விழாக்கள் கொண்டாட்டப் படுகிறது.ரோமானியர்கள் ஹிலாரியா(Hilaria) என்ற விழாவை கொண்டாடினர். Hilarity என்றால் ஆங்கிலத்தில் நகைச்சுவை.நம் நாட்டில் கோடையை வரவேற்கும் விதமாக ஒருவரை ஒருவர் ஆனந்தத்தை பகிர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டாடுறோம்.இது ஹிரண்யகசிபு காலத்திலிருந்தே தொடர்கிறது.
உலகின் பல நாடுகளில் முட்டாள்கள் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாப்படுகிறது.அயர்லாந்தில் ஒரு கடிதத்தை ஒருவரிடம் கொடுத்து இன்னொருவரிடம் கொடுக்க சொல்வர்.அவர் வெறோருவரிடம் கொடுக்க சொல்வார்.கடைசியில் கடிதத்தை திறந்து பார்ந்தால்,’இந்த முட்டாளை அலைய விடு’ என்றிருக்கும்.
இத்தாலி,பிரான்ஸ்,பெல்ஜியம் மற்றும் பிரஞ்சு பேசும் சுவிச்சர்லாந்து மற்றும் கனடா பகுதிகளில் இந்த விழா ஏப்ரல் மீன்(April fish) என அறியப்படுகிறது.அதாவது மட்டுபவர் முதுகில் அவருக்கே தெரியாமல் மீன் வடிவ காகிதத்தை ஒட்டி விடுவார்கள்.
மேலும் பல நாடுகளில் செய்திதாள்களிலும் வானொலியிலும் பல்வேறு கட்டுக்கதைகள் நம்பும்படி சொல்லப்பட்டு இந்த நாளில் மக்களை ஏமாற்றுவார்கள்.கோடையை வரவேற்கும் விதமாக உங்கள் உடன் சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்து நீங்களும் ஏமாற்றலாம்/ஏமாறலாம். ஆனால் கிண்டலுக்கும் அவமாரியாதைக்கும் வித்தியாசத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.
Think You
உலகின் சிறந்த நகைச்சுவை உண்மை நிறைந்ததாக இருக்கும்,அப்போதுதான் ஏமாற்றிவரின் புத்திசாலிதனம் வெளிப்படும்.உதாரணம் : இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி(Hockey) இல்லை.
நன்றி https://shantraveller.wordpress.com

புதன், 30 மார்ச், 2016

அது ஒரு  தனியார் தொலைகாட்சியின் மக்கள் விவாத நிகழ்ச்சி. அதில் உணவு முறையினை பற்றிய விவாதம் நடந்தது. ஒரு பக்கம் பாரம்பரிய உணவு முறை, மற்றொரு பக்கத்தில் பன்னாட்டு உணவு முறை. கடந்த இருபது ஆண்டுக்கு முன் ஏற்பட்ட உணவு மற்றம் இப்போது காரசாரமான உணவு முறையின் முக்கியத்துவத்தினை 

நன்றி

பல நாட்களுக்கு பிறகு மீண்டும் blog-ல் எழுதுகிறேன். அதற்கு  என்னை ஊக்குவித்த,ஊக்குவித்து கொண்டு இருக்கின்ற என்னுடன் பணியாற்றும் திரு.வீரா அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இனி நான் உங்களை என் சொந்த வானில் என் சொந்த நட்சத்திரத்தினை காண அழைத்து கொண்டு போக உள்ளேன் உங்களின் வண்ண சிறகுகளை விரிக்க தயாராகுங்கள்.