கோடைக்காலம் வந்துவிட்டாலே எனக்கு அதிகமான தண்ணீர்
தாகம் ஏற்பட்டு, மிகவும் அவதிப்படுகிறேன். வாய் கசப்பு, தலையில்
அளவுக்கதிகமான சூடு, குளிர்ச்சியான பொருட்களில் விருப்பம், மயக்கம், கண்கள்
மஞ்சள் நிறமாகுதல், சிறுநீரிலும் மலத்திலும் அதிகமான மஞ்சள் நிறமும்
எரிச்சலும் ஏற்படுதல் போன்ற உபாதைகள் உண்டாகின்றன. வாரம் இருமுறை சிறிய
அளவில் மது அருந்தும் பழக்கமும் எனக்கு இருக்கிறது. இவை குணமாக ஆயுர்வேத
மருந்துகள் உள்ளனவா?
- ஆ.வெங்கடசுப்ரமணியன், திண்டுக்கல்.
பித்தம் எனும் தோஷம் அக்னி எனும் மஹாபூதத்தால்
உருவாக்கப்பட்டுள்ளதால், நம் உடலில் உள்ள நீர் திரவங்களை எல்லாம் எளிதில்
சூடாக்கிவிடுகிறது. இதனால் இந்த நீர் திரவங்களில் ஏற்படும் சூடானது
குறைவதற்காக தண்ணீர் தாகத்தை அவை ஏற்படுத்துகின்றன. தண்ணீர் தாகமானது
பித்தம் மற்றும் வாயுவினுடைய சேர்க்கை இல்லாமல் ஏற்படுவதில்லை என்று
சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. ஏனெனில் இவற்றினுடைய
சீற்றமானது, உடலிலுள்ள நீர்ப்பசையை சுண்டச் செய்துவிடுகின்றன. அதுவே
தண்ணீர் தாகத்திற்கும் காரணமாகிறது. எளிதில் செரிக்காத உணவு, பால்,
மாமிசவகை உணவுகள் ஆகியவை சாப்பிட்டாலும் தண்ணீர் தாகம் சிலருக்கு
ஏற்படுகிறது. இதற்குக் உட்புற உணவுக்குழாய்களில் வாயு மற்றும்
பித்ததோஷங்களால் ஏற்படும் அடைப்பு தான் காரணமாகிறது.
மதுபானத்தில் உள்ள ஊடுருவும் தன்மை, சூடு மற்றும்
வறட்சி எனும் குணங்களால் பித்தவாயுக்கள் சீற்றமடைந்து நீர் திரவங்கள்
வறண்டு ஏற்படும் வறட்சியானது தண்ணீர் தாகத்தைத் தோற்றுவிக்கிறது. அதனால்
கோடைக்காலங்களில் நீங்கள் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்கவே முடியாது என்று தோன்றும் பட்சத்தில் சிறிய அளவில் மதுபானத்தில்
நிறைய தண்ணீர் கலந்து அருந்தலாம். சூடான மணற்பரப்பின் மீது தண்ணீரைத்
தெளித்தோமேயானால் அதிலுள்ள சூடு அடங்குவதைப்போல குளிர்ந்த மண்பானைத்
தண்ணீரை அருந்துவதால் உடலிலுள்ள நீர் திரவங்களில் ஏற்பட்டுள்ள சூடானது
தணிந்துவிடுகிறது. ஆனால் நன்கு குளிர்ந்த நீரில் குளித்தால் உடலிலிருந்து
வெளிப்புறம் சென்று கொண்டிருக்கும் வெப்பமானது தடைபட்டு உட்புறம் நோக்கித்
திரும்பி குடலைச் சென்றடைந்து தண்ணீர் தாகத்தை ஏற்படுத்துகின்றது.
சூட்டினால் சோர்வடைந்த நபரானவர் உடனடியாக குளிர்ந்த நீரில் குளிப்பதைத்
தவிர்க்கவேண்டும்.
நம் முன்னோர் தண்ணீர் தாகத்தை தவிர்ப்பதற்காக மழைத்
தண்ணீரை பூமியில் விழும்முன்பே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இந்த
மழைநீரை ஒரு சிறுஅளவில் எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிடுவார்கள்.
மழைநீரைச் சேகரிக்க முடியாத இக்காலங்களில் நாம் அருந்தும் தண்ணீரானது
இறுதியில் சிறிது துவர்ப்புச் சுவையுடன் கூடியதாகவும், மெல்லியதாகவும்,
லேசானதாகவும், குளிர்ந்ததாகவும், துர்நாற்றமில்லாததாகவும்,
பிசுபிசுப்பற்றதாகவும் இருக்குமேயானால், அதுவும் மழைநீருக்குச் சமம் என்று
குறிப்பிடலாம். தண்ணீர் தாகத்தைப் போக்குவதற்கான சில எளிய குறிப்புகள்:
கரும்புவேர், தர்ப்பைப்புல், நாணல் வேர், நெல்லினுடைய
வேர் ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க
வைத்து 250 மி.லிட்டராக குறுக்கி வடிகட்டி, குளிர்ந்த பிறகு அதில் 10
கிராம் சீனா கல்கண்டு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் பல தடவை
சிறுகச் சிறுக, பருகலாம்.
10 கிராம் நெல்பொரியைப் பொடித்து 300 மி.லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை ஸ்பூன் சர்க்கரையும், தேனும் கலந்து பருகலாம்.
அரிசி போட்டு காய்ச்சிய கஞ்சித் தண்ணீரை ஆற வைத்து சிறிது தேன் கலந்து பருகலாம்.
பால் சாதத்துடன் தேனும் சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம்.
பச்சைப்பயறு, கறுப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை ஆகியவை போட்டுக் காய்ச்சிய சூப்புடன் நெய் கலந்து பருகலாம்.
காய்ச்சி ஆற வைத்த பாலுடன் தேனும், சர்க்கரையும் கலந்து பருகலாம்.
கரும்புச்சாறு, சிறிது சர்க்கரை கலந்து கரைத்து நான்கைந்து சொட்டுகள் மூக்கினுள் விட தண்ணீர் தாகமானது குணமாகிவிடும்.
ஆயுர்வேத மூலிகை மருந்துகளாகிய சதாவரி குலம்,
த்ராக்ஷôதி கஷாயம், வாசா குடூச்யாதி கஷாயம், விதார்யாதி க்ருதம், சந்தனாதி
தைலம், ப்ரவாளபற்பம் போன்ற மருந்துகள் இதுபோன்ற தண்ணீர் தாகம் உள்ள
நிலைகளில் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தத் தக்கவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக